
நிலாத்தோழி
(பரீனா பின்த் இஷ்ஹாக்)
முன்பெல்லாம் எங்கள் கிராமத்திலே தடுக்கி விழக் கூட இடமிருக்காது. அவ்வளவு மரங்கள் இருக்கும். விழுந்தாலும் தரையை மூடியிருக்கும்
புற்கள்.
எங்கோ பயணப்படும் பிரயாணிக்கு களைப்பு நீங்க இளைப்பாற வழியெங்கிலும் ஏதேதோ மரங்கள் வரிசையாக நிழல் தர போட்டி போடும். மா மரம், மஞ்சோனா மரம், புளிய மரம், புன்னை மரம், தென்னை மரம், பனை மரம், பலா மரம், பாலை மரம், வேப்பை மரம், பனிமருந்து மரம் என இன்னும் என்னன்னவோ பெயர் தெரியா மரங்கள்.
அத்தனை அழகு எங்கள் பூமி. எத்தனை மரங்களில் ஊஞ்சல்கள் ஒய்யாரமாய் ஆடிக்கொண்டிருக்கும் சிறியவர்களுக்கும் பெரியவர்களுக்குமாய்.
வயல் செய்யும் காலங்களில் விளைநிலங்களைத் தேடி படையெடுக்கும் கொக்குகளும் குருவிகளும் மைனாக்களும் மயில்களும் என சொர்க்க பூமி எங்கள் கிராமம்.
என் கண்முன்னேதான் எனது கிராமம் தனது தனித்துவத்தை இழந்தது. வீடு கட்ட, விறகு வெட்ட என ஆரம்பித்து காரணமே இல்லாமல் மரங்களை வெட்டி வீசினர். அவரவர் தரப்பு நியாயங்கள் அவர்கள் வசம் வாகாய் இருந்தது.
இன்று பருவமழை இல்லை எனப் புலம்பல். அடிக்கும் வெயிலுக்கு ஒதுங்க ஒரு மரமில்லை. அம்மம்மாவின் புடவையில் ஊஞ்சல் கட்ட ஒரு மரமில்லை. ஓயாமல் மின்விசிறி சுற்றுகிறது வீடுகளில். அவ்வளவு புழுக்கம்.இப்போது அது கிராமமும் இல்லை. பாலக்காட்டு வெட்டை பாலைநகராகப் பெயர் மாற்றம் பெற்றாயிற்று.
இன்றோ “பச்சைப்பசேல் எனப் பூமி” என்பதெல்லாம் வெறும் எழுத்துக்களில் என்றாகி விட்டது.