
By,
எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்(JP)
ஊடகவியலாளர்
Environment Day ஒவ்வொரு ஆண்டும், இயற்கை தொடர்பான முக்கிய பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஜூன் 5ல் உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்படுகிறது.
கடந்த வருடம் 2024 ஆண்டு சுற்றுச்சூழல் கருப்பொருளாக – நில மீட்பு, பாலைவனமாதல் மற்றும் வறட்சி தடுப்பு ஆகியவை முன்னெடுக்கப்பட்டது.
ஆனால் இந்த வருடம் 2025 ஆண்டில் பூமிக்கு எதிரான பிளாஸ்டிக் பாவனையின் ஆபத்தின் நிலைப்பாடு குறித்து நோக்கப்படுகிறது.
பிளாஸ்டிக் மாசுபாடுகளினால் கடல் வாழ் உயிரினங்களை மட்டுமல்ல, மனித உடல் நலத்தையும் பாதிக்கிறது.
நாம் வாழ்வதற்கும், நமது நல்வாழ்விற்கும் தேவையான அனைத்து வளங்களையும் சுற்றுச்சூழல் எமக்கு வழங்குகிறது. உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு, இயற்கை நமக்கு எல்லாவற்றிலும் பங்காற்றுகின்றது.
மனிதகுலம் இயற்கையின் மீது இரக்கமற்ற முறையில் இயற்கை வளங்களை அழித்து, காடுகளை வெட்டி மாசுபடுத்தி புவி வெப்பமடைதலுக்கு வழிவகுத்துள்ளான். நாம் இயற்கையை நோக்கித் திரும்பி அதைப் பாதுகாக்கத் தொடங்க வேண்டிய தருணம் இது.
ஒவ்வொரு ஆண்டும், காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல்,நிலமீட்பு, பிளாஸ்டிக் பாவனை,பாலைவனமாகுதல் காடுகள் அழிப்பு மற்றும் பல்லுயிர் இழப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உலக சுற்றுச்சூழல் தினம் நினைபடுத்தப்படுகின்றது ஆனாலும் உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தப்பட்ட மாற்றம் மிகக்குறைவே!
முன்பெல்லாம் மனிதன் வெளியிடக்கூடிய கார்பன் டை ஆக்சைடை கிரகித்துக் கொண்டு ஆக்ஸிஜனை கொடுக்கும் வகையில் ஏராளமான மரங்களும் தாவரங்களும் உலகில் காணப்பட்டது இவற்றால், ஓர் இயற்கை சமநிலை தொடர்ச்சியாக பேணப்பட்டு வந்தது.
ஆனால், தற்போதைய பல காரணிகள் இந்த சமநிலையை சீர்குலைத்துள்ளன.
மனிதர்களால் மேற்கொள்ளப்படும் காடுகளை அழித்தல்,தொழிற்சாலைகளை நிறுவி பெருமளவு கார்பன்டை ஆக்சைடு வெளியேற்றம்,செயற்கை உரங்களை அதிகளவு பயன்படுத்துதல், அதிகளவான பிளாஸ்டிக் பயன்பாடு
இவற்றினால் பசுமை இல்ல வாயுக்கள், பூமியில் இருந்து 15 முதல் 60 கி.மீ. உயரத்தில் உள்ள ஓசோன் படலத்தை தாக்குகின்றன. இந்த ஓசோன் படலம் சூரியனிடம் இருந்து வரக்கூடிய புற ஊதாக்கதிர்களை தடுத்து நிறுத்தி, பூமிக்கு ஒரு பாதுகாப்பு கேடயம் போன்று விளங்குகிறது.
எமது இலங்கை திருநாட்டில் சட்டவிரோதமான மண் அகழ்வுகள் காடழிப்புகளை இல்லாதொழிக்க சட்ட ஏற்பாடுகள் வெறும் பெயரலவிளேயே! காணப்படுகின்றது. இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இதனால் பூமியில் ஏற்படும் விளைவுகள்:
பூமியின் வெப்பநிலை அதிகரிப்பு,தோல் புற்றுநோய் அதிகரிப்பு,எதிர்ப்பு சக்தி குறைபாடு,பருவமழை பொய்த்துப் போதல்,தண்ணீர் பற்றாக்குறை,உணவுப் பஞ்சம்,பூமி அதிர்ச்சி, இயற்கை பேரிடர்கள்
இவற்றை தடுப்பதற்காக எதிர்வரும் காலங்களில் நாம் ஒவ்வொருவரும்
மரம் நடுதல்: இந்த பூமியில் அதிகமரங்கள் இருந்தால் பெரும்பாலான சுற்றுச்சூழல் பிரச்சனைகளை சரிசெய்ய முடியும். மனிதர்கள் மரங்களை வெட்டி காடுகளை அழித்துள்ளனர். ஆனால் எமது சிறிய முயற்சியால், நாம் அதை மாற்ற முடியும். நம் வீட்டின் கொல்லைப்புறத்திலும் சுற்றுப்புற சூழல்களிலும் அதிக மரக்கன்றுகளை நடலாம். ஒவ்வொரு நபரும் அதிக மரங்களை நடத் தொடங்கினால், நமக்கு ஒரு பசுமையான பூமி கிடைக்கும்.
மறுபயன்பாடு, பிளாஸ்டிக்கைக் குறைத்தல் மற்றும் மீள் சுழற்சி: இந்த செயற்பாடுகளை முறையே மேற்கொண்டால் பூமியைக் காப்பாற்ற முடியும். நாம் நன்றாக சுவாசிக்கவும், சிறப்பாக வாழவும், சிறப்பாக இருக்கவும் இது உதவும். பொருட்களை ஒன்றுக்கு மேற்பட்ட முறை மீண்டும் பயன்படுத்துவதன் மூலமும், மறுசுழற்சி செய்து பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலமும், நம் அன்றாட வாழ்க்கையில் கழிவு உற்பத்தியின் அளவைக் குறைக்கிறோம். இது, நாம் வாழவும் செழிக்கவும் சிறந்த சூழலைப் பெற உதவுகிறது.
ஆகவே நாம் வாழும் பூமியில் உள்ள அனைத்து இயற்கை வளங்களை பாதுகாக்க ஒவ்வொருவரும் திடசங்கற்பத்துடன் உறுதி கொள்வோம்.