#GreenWatch

குப்பை மேட்டால் படையெடுக்கும் யானை: மனித யானை மோதல்

ஹஸ்பர் ஏ ஹலீம்

எங்களது ஊரில் காட்டு யானைகளின் தொல்லை அதிகம் இதற்கான காரணம் குப்பை மேடுதான் குப்பைகளை கொட்டுவதை நிறுத்தக்கோரி பல ஆர்ப்பாட்டங்கள் செய்த போதிலும் எவ்வித நடவடிக்கையும் இல்லை .பஸ் ஏறுவதற்காக காத்திருக்கும் போது இந்த குப்பைகளின் துர்நாற்றம் தாங்க முடியாது அது மட்டுமன்றி இங்கு பாதுகாப்பான யானை வேலி இல்லை இந்த யானை பிரச்சினையால் ஊருக்குள் நிம்மதிமாக வாழ முடியாது மாலை 5 மணிக்கே யானை ஊருக்குள் புகுந்து அட்டகாசங்களை மேற்கொள்வதுடன் எங்களது நெற்செய்கை விவசாயம் தோட்டச் செய்கைகளை அழித்து விடுகின்றன. கச்சான் போன்ற பயிர்களையும் துவம்சம் செய்து விட்டு செல்கின்றன. இந்த குப்பை கொட்டுவதனால் அங்குள்ள விலங்குகள் அதனை சாப்பிட்டு விட்டு ஊருக்குள் வருவதனாலும் பல தொற்று நோய்களும் ஏற்படுகின்றன இவ்வாறானவற்றில் இருந்து பாதுகாக்க குப்பை மேட்டை அகற்றி பாதுகாப்பான யானை வேலியினை அமைத்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம் என பாலம்போட்டாறு பத்தினிபுர கிராமத்தின் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் பொருளாளர் ஜீ.விதுர்சியா (வயது_27) தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

திருகோணமலை மாவட்டம்,தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கிராம சேவகர் பிரிவே பாலம்போட்டாறு இதில் இக்பால் நகர்,பத்தினிபுரம் ஆகிய கிராமங்கள் காணப்படுகிறது இதனை அண்மித்த கண்டி திருகோணமலை பிரதான வீதியின் சிங்கபுர எனும் பகுதியில் தம்பலகாமம் பிரதேச சபை மூலம் கொட்டப்படும் குப்பைகள் மூலமாக பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக துர்நாற்றம்,இதனை அண்டியே காட்டு யானை படையெடுப்பு போன்றனவும் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.பிரதான வீதியின் அருகே கொட்டப்படும் குப்பைகளால் இவ்வாறு பல பிரச்சினைகளை மக்கள் எதிர்கொள்வதுடன் அவ்வீதி ஊடாக பயணிக்க முடியாத துர்நாற்றம் ஏற்படுவதாகவும் அப் பகுதி கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கடந்த பல வருட காலமாக இங்கு கழிவு குப்பைகள் கொட்டப்பட்டு குப்பை மேட்டாக மாறியுள்ளது இங்கு பிரதேச சபை மூலமான குப்பை மட்டுமல்ல வீதியால் செல்லும் தனியார் வாகன போக்குவரத்துதாரிகளும் குப்பைகளை வீதி அருகே கொட்டி விட்டு செல்கின்றனர் இதனால் அதனை தேடி யானைகளும் படையெடுப்பதுடன் குறித்த யானைகள் ஊருக்குள் புகுந்து மக்கள் சொத்துக்களை நாசமாக்கி விட்டு செல்கின்றன. விவசாயத்தை நம்பியே வாழும் இம் மக்களின் தோட்டப் பயிர்ச் செய்கைகளை அழித்து விட்டு செல்வதாகவும் இங்கு வாழும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

பத்தினிபுர கிராமத்தில் தோட்டச் செய்கையில் அதிகமாக ஈடுபட்டு வருகிறோம் இதனை நம்பியே வாழ்வாதாரத்தை மேற்கொள்கிறோம் ஆனால் யானை தொல்லையால் பெரும் நஷ்டங்களை எதிர் நோக்கியுள்ளோம் இதனால் நிரந்தர யானை வேலியினை அமைக்க உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் தங்களது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதாக இருந்தால் அச்சத்துடனேயே அனுப்ப வேண்டியுள்ளது சுமார் 4கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள தம்பலகாமம் பகுதிக்கு பிள்ளைகள் வகுப்புகளுக்கு சென்று வரவேண்டும் இதனால் யானை வந்திடுமோ என்ற பயம் எமக்குள் வீடு வந்து சேரும் வரை மனது படபடக்கிறது இது இவ்வாறு இருக்க இப்பகுதியில் ஜெயபுரத்தில் குப்பை மேடு உள்ளது இதனை அண்டியும் பிரதான வீதியை கடந்தும் எங்கள் ஊருக்குள் யானை வருகிறது அருகாமை கிராமத்தில் உள்ள விலாங்குளம் பகுதியில் யானை வேலி அமைத்துக் கொடுக்கப்பட்டதை போன்று நிரந்தரமான பாதுகாப்பான யானை வேலியினை அமைத்து தாருங்கள் என பாலம்போட்டாறு பத்தினிபுரத்தை சேர்ந்த தோட்டச் செய்கையில் ஈடுபடும் பெண்ணான டி.விஜயபாரதி வயது(48) தனது உளக்குமுறல்களை வெளிப்படுத்தியிருந்தார்.
பல வருட காலமாக மக்கள் ஆரம்பம் முதல் இந்த கிராமத்தில் நெற் பயிர்ச் செய்கை,தோட்டச் செய்கைகளான கத்தரி,வெண்டி,மரவள்ளி,கச்சான் உட்பட பல மேட்டு நிலப் பயிர்களையும் செய்து தங்களது வாழ்வாதார தொழிலாகவும் இலாபமீட்டி வருகின்றனர் ஆனால் இதனை பாதுகாப்பது அவர்களுக்கு சவாலான விடயமாகவே உள்ளது .தினமும் இந்த யானை தொல்லையால் நிம்மதியாக தூக்கமின்றியும் குடியிருப்பு பகுதிக்குள் யானை வருமோ என்ற அச்சமும் ஏற்படுகிறது யானை தாக்குதல் மூலமாக கடந்த 2022 ம் ஆண்டில் தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் இரண்டுக்கும் மேற்பட்ட உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளதுடன் 5க்கும் மேற்பட்ட யானைகளும் உயிரிழந்துள்ளன. காட்டு யானைகளானது குப்பை மேட்டினை நோக்கி பகலிலும் இரவிலும் படையெடுக்கின்றன. இங்கு கொட்டப்படும் குப்பைகளில் பொலித்தின் போன்ற உக்க முடியா பொருட்களும் காணப்படுவதுடன் இதனால் சூழல் மாசடைவினையும் ஏற்படுத்துவதுடன் ஒரு வகை துர்நாற்றம் மூலமாக தொற்று நோய்களும் ஏற்படலாம் பிரதான வீதியில் பஸ் தரிப்பிடத்தில் பஸ்சுக்காக காத்திருக்க முடியாது அவ்வளவு துர்நாற்றம் வீசுகிறது இவ்வாறான விடயங்கள் தொடர்பில் பல முறை மக்கள் சுட்டிக்காட்டியும் பயனளிக்கவில்லை .பாதுகாப்பற்ற யானை வேலியின்மை மக்களை மேலும் இந்த காட்டு யானை தொல்லை மூலமாக பயம் ஏற்படுகிறது.

கடந்த வருடம் 2500 மரவள்ளி நாட்டி அதனை யானைகள் அழித்து விட்டன இதனால் பாரிய நஷ்டம் அடைந்துள்ளது யானைக்கு வெடி வைக்கவா முடியும் இல்லையே இதனை கட்டுப்படுத்தி தாருங்கள் மேலும் குப்பை மேட்டினால் தான் இந்த யானை எங்களது ஊரை நோக்கி ஊருக்குள் படையெடுத்து பயிர்களையும் நாசமாக்குகிறது என விவசாயியான எஸ்.விஜயகுமார் வயது (52) தெரிவித்தார்.
மக்கள் தங்களது உயிரை துச்சமென மதித்து பல போராட்டங்களுக்கு மத்தியில் யானை மனிதன் மோதல் என்ற சவாலுக்குள் முகங்கொடுத்து வாழ்கின்றார்கள். இயற்கை இனங்களின் விலங்கினங்களை பாதுகாப்பதும் பொறுப்பாகவுள்ளது ஆனாலும் இந்த மனித யானை மோதல் முடிவுக்கு வருவதென்பது கடினமான ஒன்றாகும்.
இக் காட்டு யானை தொல்லையில் இருந்து பாதுகாப்பு பெற வேண்டும் என்பதே இப் பிரதேச மக்களின் கோரிக்கையாக உள்ளது இருந்த போதிலும் பாதுகாப்பான யானை வேலி இன்மை குறைபாடாக உள்ளதுடன் வனஜீவராசிகள் திணைக்களம் மூலமாக அமைக்கப்பட்ட அநேகமான வேலிகள் சேதமாக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பின்றியும் காணப்படுகிறது .
இரவில் குடியிருப்பு பகுதிகளில் பயிரினங்களை பாதுகாப்பதா நிம்மதியாக தூங்குவதா என்ற வினா இப் பிரதேச மக்களின் கனவுகளாகவே கலைந்து செல்கின்றது.
இந்த குப்பை மேட்டு மூலமாகவே யானை ஊருக்குள் ஒருவதுடன் குப்பைகளை கொட்டுவோர் வீதியின் அருகே கொட்டி விட்டு செல்கின்றனர் தம்பலகாமம் முழுவதுமாக சேரும் கழிவுகளை இங்கு கொட்டுவதனால் அதிகமான நாய் இனங்களும் பெருக்கமடைந்து காணப்படுகிறது இதனால் சில வேலைகளில் இறந்து வீதிகளில் காணப்படுவதுடன் துர்நாற்றமும் வீசுகிறது எனவே எங்களுக்கான பாதுகாப்பான யானை வேலி தேவை என்பதுடன் குப்பை மேட்டை அகற்ற வழி செய்யுங்கள் இந்த கிராமத்தில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார் இருவர் காயமடைந்துள்ளனர் பலரை காட்டு யானை துரத்தியுள்ளது. எங்கள் கிராமம் பனை மரங்களை அதிகம் கொண்ட பகுதி இதனை நோக்கி சாப்பிடுவதற்காக யானை ஊருக்குள் வருகிறது இதனால் இரவு நேரங்களில் வெளியில் இறங்க முடியாது பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகிறோம் பாலம்போட்டாறு ஜெயபுர பகுதியின் ஒரு பகுதி ஊடாக யானை வேலா காணப்பட்டாலும் எமது கிராமத்துக்கான பாதுகாப்பான வேலி இல்லை இது தொடர்பில் பல முறை பிரதேச சபைக்கு கடிதம் மூலமான கோரிக்கை செய்யப்பட்டும் பலன் கிட்டவில்லை இந்த குப்பை மேட்டு பிரச்சினை, யானை தொல்லைகளில் இருந்தும் பாதுகாப்பு பெற்றுத் தாருங்கள் என பத்தினி புர மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் எஸ்.கௌரி தனது கருத்தை உரத்த குரலில் வெளிப்படுத்தினார்.
மக்கள் இது தொடர்பில் போராட்களை முன்னர் தீர்வு வேண்டி நடாத்தியிருந்தாலும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்பது பெரும் குறைபாடாக காணப்படுகிறது.
குப்பை மேட்டினால் ஓரிரு பிரச்சினைகள் மாத்திரமல்ல ஒட்டு மொத்தமாக சூழல் மாசடைவு உட்பட பல பாதகமான தாக்கங்களை உண்டுபண்னுகிறது இதனால் அதன் ஊடாக பயணிக்கும் பாதசாரிகள் அதனை அண்டியுள்ள குடியிருப்பு பிரதேச மக்களும் பாதிக்கப்படலாம். இவ்வாறான பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வின்றியே மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் .யானை மனித மோதல் ஏற்கனவே இருந்து வந்தாலும் குப்பை மேட்டினால் மேலும் இக் காட்டு யானை தொல்லை அதிகரித்து காணப்படுகிறது.

எனவே இம் மக்களின் பிரச்சினைகளாக யானை தொல்லை,குப்பை மேட்டை அகற்றுதல் தொடர்பில் எப்போது தீர்வு கிட்டும் என இம் மக்களின் ஏகோபித்த ஒரே ஒரு எதிர்பார்ப்பாக காணப்படுகிறது.

Share this message on your Social Network
Jinara Thejana

Jinara Thejana

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Climate Watch (TCW) uses climate journalism and responsive storytelling to advance climate justice, highlighting the disproportionate impacts of climate change on marginalized groups—particularly women, girls, farmers, fishers, and other vulnerable populations. Through RTI and investigative journalism, we promote transparency and accountability in climate initiatives.

Copyright © Climate Watch – 2025. All Right Reserved.