காலநிலை மாற்றங்களும் நீரில் மூழ்கப்போகும் பிரதேசமும்

By,
வி ஜெ நிதர்சன்
வடமராட்சி கிழக்கு,
யாழ்ப்பாணம்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகமானது துணை நிர்வாக அலகுகளாக 18 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஒரு சிறு பகுதி தவிர்ந்த யாழ் குடாநாட்டின் கிழக்குக் கடற்கரை முழுவதையும் தன்னுள் அடக்கியுள்ள இப் பிரிவானது ஒடுங்கிய நீளமான வடிவில் அமைந்துள்ளது. கிழக்கு எல்லையில் இந்தியப் பெருங்கடல் உள்ளது, மேற்கில்
ஒடுங்கிய நீரேரி இதனைச் சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் கிளிநொச்சி மாவட்டம் ஆகியவற்றிலிருந்து பிரிக்கின்றது. இதன் நீளம் குறைந்த வடக்கு எல்லையில் கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவு உள்ளது. இதன் பரப்பளவு 179 சதுர கிலோமீட்டர்கள் ஆகும்.

கிழக்கு பகுதி முழுவதும் கடலாலும் மேற்கு பகுதி முழுவதும் தொண்டைமானாறு கடல் நீரேரியாலும் சூழப்பட்ட குறித்த ஒடுங்கிய பிரதேசமானது எதிர் காலங்களில் பெரும் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் நீரில் மூழ்கும் அபாய நிலையிலேயே காணப்படுகின்றது.

சுனாமி, சூறாவளி, வெள்ளப்பெருக்கு போன்ற பெரும் இயற்கை பேரிடர்கள் நிகழும் சந்தர்ப்பங்களில் மக்கள் நீரேரி வழியாக பிரதேசத்தினை விட்டு பாதுகாப்பாக வெளியேறுவதற்கு நீரேரியின் ஊடாக அபாய வெளியேற்ற பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன
குறிப்பாக நாகர்கோவில் – எழுதுமட்டுவாள் அபாய வெளியேற்ற பாதை, மாமுனை – பளை அபாய வெளியேற்ற பாதை கொடுக்குளாய் – இயக்கச்சி அபாய வெளியேற்ற பாதை என்பவற்றை குறிப்பிட முடியும்.

இங்கே மக்கள் பயன்பாட்டிற்காக நீரேரியின் மேலாக அமைக்கப்பட்ட மருதங்கேணி – புதுக்காடு வீதி தவிர்ந்த ஏனைய அபாய வெளியேற்ற பாதைகள் அனைத்தும் அனர்த்த நேரங்களில் மக்கள் அவசரமாக வெளியேறும் நிலையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

குறித்த மருதங்கேணி – புதுக்காடு வீதியில் அமைந்துள்ள பாலம்கூட கடந்த வருடம் இடம்பெற்ற சூறாவளியின் போது அதிகளவில் அரிப்பிற்குள்ளாகி சில மணி நேரங்கள் வீதியினூடாக போக்குவரத்துக்கள் தடைப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. பின்னர் மண் மூடைகள் அடுக்கப்பட்டு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு பாவனைக்கு விடப்பட்டதுடன் இன்று வரையிலும் பாலம் அதே நிலையிலேயே உள்ளது. இந்த நிலையில் உள்ள குறித்த ஒரு வீதியால் மாத்திரம் பிரதேச மக்கள் அனைவரும் அனர்த்த நேரங்களில் வெளியேறுவது என்பது மிகவும் கடினம்

சுனாமி போன்ற பெரும் அனர்த்தம் நிகழ்ந்தால் கடல் ஒரு பக்கமாக நிலப்பரப்பிற்குள் நுழைந்து அது நீரேரியுடன் கலக்கும் சந்தப்பத்தின் போது இடைநடுவே உள்ள மக்களும் நிலப்பரப்பும் அப்படியே நீரில் மூழ்கும் நிலையே காணப்படுகின்றது அத்துடன் தொண்டைமானாறு கடல் நீரேரியானது கடலுடன் கலக்கும் இடத்திற்கு அண்மையில் நீரேரியின் குறுக்கே அமைக்கப்பட்ட தொடர் கதவுகளின் மூலமாக மழை காலங்களில் நீர் கடலுடன் கலக்க விடாது கட்டுப்படுத்தப்படுகின்றது இதனால் நீரேரியின் நீர் மட்டம் உயர்வதனால் அதன் இரு கரைகளிலும் உள்ள தாழ் நிலங்கள், வயல் நிலங்கள், வீதிகள், மக்கள் குடியிருப்புக்கள் போன்றவற்றினுள் நீர் புகுந்து வெள்ள அபாயம் ஏற்படுகின்றது அத்தோடு குறித்த செயல்பாட்டினால் நீரேரியின் நீர் மட்டம் உயர்வதனால் இப் பகுதிகளில் பெய்யும் மழைநீர் நீரேரியுடன் கலக்க முடியாமல் குடியிருப்புகளிலே தேங்கி வெள்ள அபாயத்தினை பல மடங்கு அதிகரிக்கின்றது.

வருடாந்தம் நிகழும் மாரி கால மழை நேரங்களில் கூட குறித்த அபாய வெளியேற்ற பாதைகள் முற்றாக நீரினால் மூழ்கடிக்கப்பட்டு மக்கள் பாவனையை தடை செய்து கொண்டு இருப்பதோடு குறித்த அபாய வெளியேற்ற பாதைகள் சரியான பராமரிப்பு மற்றும் திடத்துடன் இல்லாமையால் வருடம் முழுவதுமாக நீரினால் அரிப்பிற்கு உள்ளாகி வருகின்றன.

ஒவ்வொரு மாரி காலங்களிலும் அரிப்பிற்கு உள்ளாகி நீரினால் மூழ்கும் வீதிகளினை தற்காலிகமாக மண் மூடைகளை அடுக்கி வீதிகள் மேலதிகமாக அரிக்கப்படாது தடுக்கப்படுகின்றது. ஓரிரு மாதங்களில் மண் மூடைகளினால் அமைக்கப்பட்ட தடுப்புகள் செயலிழந்தது அவை மீண்டும் அரிப்பிற்கு உள்ளாகின்றன.

குறித்த அபாய வெளியேற்ற பாதைகள் வருடம் தோறும் அரிப்பிற்கு உள்ளாகும் போது கடந்த இரு தசாப்தங்களாக கொடுக்குளாய் – இயக்கச்சி அபாய வெளியேற்ற பாதையை மாத்திரம் பிரதேச மக்களே தமது சொந்த நிதியில் அவற்றை முடிந்தளவு செப்பனிட்டு வருகின்றனர்.

2004 சுனாமியில் குறித்த பிரதேசத்தில் 3000 இற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். சுனாமி பேரழிவின் பின்பே புதுக்காடு – மருதங்கேணி வீதி தவிர்ந்த ஏனைய வீதிகள் விழிப்படைந்த மக்களின் முயற்சியால் தற்காலிகமாக அமைக்கப்பட்டும் செப்பனிடப்பட்டுமிருந்தன.

இதில் மாமுனை – பளை அபாய வெளியேற்ற பாதையானது மணல் ஒழுங்கையாக முற்றாக பாவனை செய்ய முடியாத நிலையில் உள்ளதோடு குறித்த பகுதி மக்கள் யாழ்ப்பாணம் அல்லது கிளிநொச்சி, பளை போன்ற பகுதிகளுக்கு அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக செல்வதற்கு 7km தூரம் செல்ல வேண்டிய தூரத்தினை அண்ணளவாக 21km தூரம் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

நாகர் கோவில் – எழுதுமட்டுவாள் பாதையில் இரு தசாப்தங்களுக்கு பிறகு இந்த வருடம் பாலம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன பாலம் தவிர்ந்த வீதியின் பகுதிகள் மணல் ஒழுங்கையாகவே தற்போது உள்ளன குறித்த பாதை செயலிழந்து உள்ளதால் குறித்த கிராம மக்கள் யாழ்ப்பாணம் செல்வதற்கு அண்ணளவாக 20km தூரம் மேலதிகமாக பயணிக்க வேண்டிய நிலை உள்ளது

அதிக மக்கள் பயன்படுத்தும் கொடுக்குளாய் – இயக்ச்சி அபாய வெளியேற்ற பாதையானது அண்ணளவாக 3000 இற்கும் மேற்பட்ட மக்கள் தினமும் பயன்படுத்தி வரும் பாதையாகும் இதில் பாடசாலை மாணவர்கள், வேலை நிமித்தம் செல்பவர்கள், வைத்தியசாலை தேவையுடையோர், வியாபாரிகள் என பலர் உள்ளடங்குவார்கள். அரிப்புக்கு உள்ளாகும் பகுதிகள் மக்களின் முயற்சியால் ஆண்டுகள் தோறும் செப்பனிடப்பட்டு வருகின்ற வேளை இந்த ஆண்டு அதற்கான புனரமைப்பு பணிகளை ஆரம்பிப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. குறித்த பாதையும் கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக நீர் மட்டம் உயர்ந்தமையால் இரண்டு நாட்கள் போக்குவரத்து தடைப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த பாதைகள் அனர்த்த நேரங்களில் மக்களின் உயிர்களை பாதுகாப்பதோடு மட்டும் அல்லாது நாள்தோறும் 15000 இற்கு மேற்பட்ட மக்கள் பயணங்களை மேற்கொள்ள பயன்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

குறித்த அபாய வெளியேற்ற பாதைகளை பாலங்கள் சரி செய்வதுடன் மாத்திரம் நிறுத்திவிடாமல் சரியாக புனரமைப்பு செய்தால் ஒரு பிரதேசத்தின் மக்களையே சுனாமி, சூறாவளி, வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை அனர்த்தங்களில் இருந்து உயிர் சேதம், பொருள் சேதம் என்பன ஏற்படாதவாறு பாதுகாக்க முடியும்
நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ள பிரதேச மக்களை பாதுகாக்க முடியும்.

தற்போதைய துரித புவி வெப்பமடைதல் காரணமாக காலநிலையில் ஏற்பட்டுள்ள பாரிய மாறுதல்கள் ஓரிரு நாட்களில் மிக அதிகளவான மழை வீழ்ச்சிகளை ஏற்படுத்துவதை கடந்த சில வருடங்களாக அவதானிக்க முடிகின்றது ஆகவே எதிர்வரும் காலங்களில் இவ்வகையில் எதிர்வு கூற முடியாத மிகப் பாரிய காலநிலை மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகளவில் காணப்படுகின்றன அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுமாயின் இப்பகுதி முழுமையாக அழிவுக்கு உள்ளாகும் அபாயத்தை எதிர்நோக்கி உள்ளது.

இந் நிலையில் ஏற்படும் அனர்த்தங்களை குறைக்க வேண்டுமாயின் குறித்த பாதைகள் உயர்த்தப்பட்டு செப்பனிடப்படுவதுடன் நீரேரியின் இரு கரைகளிலும் அணைக்கட்டுக்கள் அமைப்பதுடன் மக்களுக்கு அனர்த்த நேரங்களில் செயற்படுதல் தொடர்பான விழிப்புணர்வு செயற்திட்டங்களை முன்னெடுப்பதும் அவசியமானதாகும்

Share this message on your Social Network