#GreenWatch

உயிர்வாழ்வதற்கான போர்க்களம்”அதிகரித்து வரும் யானை- மனித மோதல்”

பரமேஸ்வரன் யாகவன்

அடர்ந்த காடுகள் மற்றும் பரந்த வயல்வெளிகளின் மத்தியில், மிகப்பெரிய போராட்டமொன்று இடம்பெற்றுக்கொண்டுள்ளது. இது உயிர் வாழ்விற்கும் சகவாழ்விற்கும் இடையிலான போராட்டமாகும். மனித விரிவாக்கம் மற்றும் நில அபகரிப்பு, வாழ்வியல் காரணங்களினால், யானைகளின் வாழ்விடங்களை மற்றும் அவற்றின் பண்டைய பாதைகளை ஆக்கிரமிப்பதால் அவை விளிம்பிற்கு தள்ளப்படுகின்றன. ஒரு காலத்தில் மனிதர்களால் போற்றப்பட்ட அவை, இப்போது விவசாயிகள் மற்றும் சமூகங்கள் தமது வாழ்விடங்களையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க போராடும் போராட்டத்தை எதிர்கொள்கின்றன. ஆனால் இது உண்மையிலேயே ஒரு மோதலா,அல்லது இயற்கையும் மனிதகுலமும் இணைந்து செழிக்க ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டிய உலகில் சமநிலைக்கான கூக்குரலா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சமீப நாட்களாக காட்டு யானைகளின் உயிரிழப்புகள் தொடர்பில் பல்வேறு செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இந்நிலையில், இலங்கையின் வனப்பகுதிகளில் யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைவதுடன், இது இரு தரப்பிலும் பேரழிவு தரும் இழப்புகளுக்கும் வழிவகுத்துள்ளன.குறிப்பாக கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2024 வரையிலான கடந்த ஆறு ஆண்டுகளில், யானை -மனித மோதல்களால் இலங்கையில் 2,425 காட்டு யானைகளும் 961 பொதுமக்களும் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் சமீபத்திய அறிக்கைகளில் அவதானிக்க முடிகின்றது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மாத்திரம் 43 காட்டுயானைகளும், மூன்று மனிதர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அந்தத் தரவுகள் வெளிப்படுத்துகின்றன.

கடந்த காலத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்டுவரும் இந்த காட்டு யானைகள்- மனித மோதல்கள் மற்றும் உயிரிழப்புகளை கருத்தில் கொண்டு இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் FactSeeker இனால் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்திடம், தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்தி எழுத்து மூலம் தகவல் கோரப்பட்டது. அவ்வாறு பெற்றுக்கொண்ட தகவல்களை பகுப்பாய்வு செய்ததை அடுத்து, FactSeeker இத்தகவல்களை வெளிப்படுத்துகின்றது.

இந்த காலகட்டத்தில் அதிகமான மனித உயிரிழப்புகள் அநுராதபுரம் மாவட்டத்தில் பதிவாகியுள்ளன. இதன்போது 185 பேர் அநுராதபுரம் மாவட்டத்தில் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. அதேபோல் கடந்த ஆறு ஆண்டுகளில் அதிகமான காட்டுயானைகளின் உயிரிழப்புகள் 2023ஆம் ஆண்டு பதிவாகியுள்ளன. அவ்வாண்டு 488 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. வனப்பகுதி அடிப்படையில் கணக்கெடுப்பை முன்னெடுத்துள்ள நிலையில், கடந்த ஆறு ஆண்டுகளில் அதிகமான காட்டு யானை உயிரிழப்புகள் பொலன்னறுவை வனப்பகுதிகளில் பதிவாகியுள்ளன.அப்பகுதிகளில் 487 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.

இவ்வாறு கொல்லப்பட்டுள்ள காட்டு யானைகள் முக்கியமாக, துப்பாக்கிச் சூடு, மின்சாரக் கம்பி தாக்குதல் மற்றும் பட்டாஸ் மூலமான தாக்குதல் போன்ற காரணங்களால் அதிகமான காட்டு யானைகள் உயிரிழக்கின்றன. 2019 முதல் 2024 வரையிலான ஆறு ஆண்டுகளில், துப்பாக்கிச் சூட்டால் 409 யானைகளும், பட்டாஸ் தாக்குதல் மூலம் 356 யானைகளும், மின்சார கம்பி தாக்குதலில் 316 யானைகளும் உயிரிழந்துள்ளன. மேலும், அதிகமான சொத்து சேதங்களும் பொலன்னறுவை மாவட்டத்திலேயே இடம்பெற்றுள்ளன. 2024ஆம் ஆண்டில் மாத்திரம் மனித-யானை மோதலால் 3,756 பேர் சொத்து சேதங்களை சந்தித்துள்ளனர். இது கடந்த ஆறு ஆண்டுகளில் பதிவாகியுள்ள மிக அதிகமான சொத்து சேதங்களாகும்.

இலங்கையின் யானைகளின் உயிர்வாழ்வு கொள்கைகள் மற்றும் உத்திகளை கையாள்வதில் மட்டுமல்ல, சமூகத்தின் அனைத்துத் துறைகளின் கூட்டு முயற்சியைகளிலும் சார்ந்துள்ளது. மனிதர்களும் யானைகளும் முரண்பாடுகளின்றி செழித்து வளரக்கூடிய ஒரு எதிர்காலத்தை உருவாக்க, பாதுகாவலர்கள்,அதிகாரிகள் மற்றும் உள்ளூர் சமூகங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், இந்த அற்புதமான உயிரினங்கள் வரும் தலைமுறைகளுக்கு நமது நிலப்பரப்புகளில் தொடர்ந்து சுற்றித் திரிவதை உறுதி செய்ய வேண்டும்.

Share this message on your Social Network
Jinara Thejana

Jinara Thejana

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Climate Watch (TCW) uses climate journalism and responsive storytelling to advance climate justice, highlighting the disproportionate impacts of climate change on marginalized groups—particularly women, girls, farmers, fishers, and other vulnerable populations. Through RTI and investigative journalism, we promote transparency and accountability in climate initiatives.

Copyright © Climate Watch – 2025. All Right Reserved.