By, N. Shayinthan
காலநிலை மாற்றம் என்பது உலகளாவிய சூழலில் மிக முக்கியமான பிரச்சினையாக உருவாகியுள்ளது. இலங்கை, ஒரு சிறிய தீவுநாடு என்பதால், காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை அதிகமாக உணர்கிறது. வெப்பநிலை உயர்வு, மழை முறைமைகள் மாற்றம், கடல் மட்ட உயர்வு போன்ற பல்வேறு விளைவுகள் இலங்கையின் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரத்திற்குப் பெரும் சவாலாக உள்ளன.இலங்கையின் விவசாயம், மீன்பிடி தொழில், சுற்றுலா துறை போன்ற முக்கியமான பொருளாதார துறைகள் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படுகின்றன. நெல், தேயிலை, ரப்பர் போன்ற பயிர்கள் மழை முறைமைகள் மாற்றம் மற்றும் நீர்ப்பாசன பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றன. கடல் மட்ட உயர்வால் கடற்கரை பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது, இது மீன்பிடி தொழில் மற்றும் சுற்றுலா துறைக்கு பெரும் ஆபத்தாக உள்ளது.
அபிவிருத்தியடைந்து வரும் நாடாகவும், அயன மண்டலத்திலுள்ள ஒரு தீவாகவும் விளங்குவதனால் இலங்கை காலநிலை மாற்றத்தினால் மிக அதிகளவில் பாதிக்கப்படக் கூடியது. மிகச் செறிவாகப் பெய்யும் மழையைத் தொடர்ந்து, மிகையாகப் பாய்ந்தோடும் வெள்ளம், நிலச்சரிவுகள், நீண்ட காலத்திற்கு நிலவும் உலர் காலநிலையின் விளைவாக ஏற்படும் வரட்சி போன்றன இலங்கையில் பொதுவான நிகழவுகளாக மாறியுள்ளன.
ஏற்கனவே பெரும் பிரச்சினைகளை உருவாக்கியுள்ள காலநிலைப் போக்குகளில் ஏற்படும் வேறு எந்தவொரு மோசமான தாக்கமும் நாட்டிலுள்ள அனைத்து சமூக பொருளாதார நடவடிக்கைகளிலும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே காலநிலை மாற்றத்தின் மோசமான பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு நிலைமைக்கு ஏற்றவாறு மாறக் கூடியவாறு நாட்டை கட்டியெழுப்பத் தேவையான இசைவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வது உடனடித் தேவையாகும். முன்னுரிமை அடிப்படையில் இசைவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதேவேளை நிலைபேறான அபிவிருத்தி மற்றும் காலநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகள் கட்டமைப்பு மற்றும் . அதன் கியோட்டோ நெறிமுறையின் நிபந்தனைகளுக்கு ஏற்ப பசிய வீட்டு வாயுக்கள் வெளியேறுவதைக் குறைப்பதற்கான முயற்சியில் இலங்கை செயலூக்கத்துடன் பங்குபற்றும்.
இலங்கையில் காலநிலை மாற்றம் பல்வேறு காரணங்களினால் ஏற்படுகிறது. உலகளாவிய மற்றும் உள்ளூர் காரணிகள் இந்த மாற்றத்துக்கு நேரடியாகசெல்வாக்கு செலுத்துகின்றன.
முதலில், பச்சை வீட்டுவாயு முக்கிய காரணமாகக் காணப்படுகின்றன. உலகில் எண்ணெய், நிலக்கரி போன்ற புவிச்சுழற்சி எரிபொருட்கள் அதிகமாக பயன்படுத்தப்படுவதால், வளிமண்டல காபனீர்ஆக்சைட் அதிகரிக்கிறது. இது புவி வெப்பமடையும் விளைவுகளை ஏற்படுத்துகிறது.இரண்டாவது, காடு அழிப்பு முக்கியமான பிரச்சினையாக உள்ளது. இலங்கையில் உள்ள பெருமளவு காடுகள் விவசாயம் மற்றும் குடியிருப்பு சார்ந்த தொழில் வசதிக்காக அளிக்கப்படுகின்றன.
இதனால் வளிமண்டலத்தில் கார்பன் டைஆக்சைட் சுழற்சி பாதிக்கப்படும். மூன்றாவது, கடல் மட்டம் உயர்வு மற்றும் கரை தேய்வு இலங்கையின் கடற்கரை பகுதியை பாதிக்கின்றன. இது பல கிராமங்களை ஆபத்துக்கு உள்ளாக்கி, வாழ்வாதாரத்தை பாதிக்கிறது.நான்காவது, நிலைமாறும் பருவமழை முறைகள் வேளாண்மை மற்றும் நீர்வளத்தை திசைதிருப்புகின்றன. இயற்கையான நீர்பாசன முறைகள் பாதிக்கப்படுவதால் விவசாயிகள் பெரும் சவால்களை எதிர்நோக்குகிறார்கள்.இலங்கை இவ்வாறு திடீர் காலநிலை மாற்றங்களை எதிர்நோக்கிக்கொண்டிருக்கும் நிலையில், நிலையான வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மிக அவசியம்.காலநிலை மாற்றங்களுக்கு முகங்கொடுப்பதற்காக சர்வதேச மற்றும் தேசிய ரீதியில் ஏற்கனவே ஒன்றிணைந்த வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், 1992ஆம் ஆண்டில் டப்ளின் மகாநாடும் ஐக்கிய நாடுகள் அமைப்பினால் 1994ஆம் ஆண்டில்
நிறைவேற்றப்பட்ட காலநிலை மாற்றங்களுக்கு முகங்கொடுப்பதற்கான சமவாயமும் மிகவும் முக்கியமான திருப்புமுனைகளாவதுடன், 2002 கியோத்தோ சமவாயமும் இதன் மற்றொரு அடியெடுப்பாகும்.
காலநிலை பாதிப்புக்களைக் குறைப்பதற்காக இலங்கை இதுவரையில் எடுத்துள்ள நடவடிக்கைகள்
- நிறுவன ரீதியான வழிமுறைகள்
- செயற்றிட்ட ரீதியான வழிமுறைகள்
நிறுவன ரீதியான வழிமுறைகள் - மொறட்டுவை மற்றும் பேராதெனியாவில் 2002ஆம் ஆண்டில் ஆராய்ச்சி நிறுவனங்களை நிறுவுதல்
- 1980, 1988, 2000ஆம் ஆண்டுகளில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் திருத்தப்பட்ட சுற்றாடல் சட்டங்களில் நீர்வள முகாமைத்துவம் தொடர்பில் சட்டதிட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
- 2010 மகிந்த சிந்தனை ஹரித்த லங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ரன்தொர தேசிய நிகழ்ச்சியின் கீழ் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தியும் நீர்ப்பாசன அபிவிருத்தியும், 2012 ‘எப்போதும் எல்லோருக்கும் நீர்’ என்ற கருப்பொருளின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட வேலைத் திட்டங்களும், தேசிய பௌதிகத் திட்டமிடல் கொள்கை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழும் காலநிலை மாற்றகளினால் நீர் வழங்கலில் ஏற்படும் தடைகளை நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், செயற்பாட்டுப் பிரிவு பலவீனமான மட்டத்தில் காணப்பட்ட போதிலும் நீர் வழங்கல், தரம், வடிகாலமைப்பு மற்றும் நீர்ப்பாசன நடவடிக்கைகள் குறித்து ஏறத்தாழ 50 சட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், ஏறக்குறைய 30 நிறுவன செயற்படுகின்றன.
மேலும் புதிய நீர்ப்பாசன செயற்றிட்டமாக மொறகஹகந்த, களுக. வெஹெர்கல, மகஓய, கெக்கிரிஓபொட, தெதுறுஓய போன்ற பாரிய நீர்ப்பாசனத் திட்டங்கள் பல நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.விவசாயத் திணைக்களம் இது வரையில் வறட்சி, உவர்த்தன்மை. நோய்ப் பீடைத் தொல்லைகள் ஆகியவற்றைத் தாங்கக் கூடிய குறைந்த வயது நெல் பேதங்கள் சிலதையும் தோட்டப் பயிர்கள் மற்றும் காய்கறிகள் சிலதையும் வெளியிட்டுள்ளது. (கௌப்பி, உளுந்து, பயறு, சோளம், சோயா போஞ்சி போன்றன)
நீர் வினைத்திறனை அதிகரிப்பதற்காக குறைந்தளவில் நிலத்தினைத் தயார்படுத்தல், ஈர மற்றும் உலர் பயிர்ச்செய்கை முறை, செறிவூட்டப்பட்ட மண்ணில் பயிர்ச்செய்கை, பாரசூட் முறை பயிர்ச்செய்கை என்பன அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நெல், தோட்டப் பயிர்கள், தேயிலை, தென்னை, இறப்பர் மற்றும் ஏற்றுமதிப் பயிர்கள் தொடர்பில் 6 ஆராய்ச்சி நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதுடன், அதன் மூலம் வறட்சிக்கு. கடும் மழைக்கு மற்றும் பீடைத் தொல்லைகளுக்கு ஒத்துபோகக்கூடிய பயிர் வகைகளும் பயிர்ச்செய்கை முறைகளும் இனங் காணப்பட்டுள்ளன.
இலங்கையில் காலநிலை மாற்றத்தையும் அதனால் ஏற்படும் பிரச்சனைகளை குறைப்பதற்கு இலங்கை அரசாங்கம் பல்வேறு வகையான செயல்பாடுகளை செய்வதை போன்று பல்வேறுபட்ட அரசு சார்பற்ற நிறுவனங்களும் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் முக்கிய பங்களிப்பினை செய்கின்றன. உதாரணமாக உள்ளூர் சமூகங்களுக்கு காலநிலை மாற்றம் தொடர்பாக விழிப்புணர்வு செய்தல், இந்தப் பிரச்சினையில் இருந்து விடுபடுவதற்கான உபாயங்களை தெளிவுபடுத்தல், காலநிலை மாற்றத்திலிருந்து விடுபடுவதற்கான அரசக் கொள்கைகளை வகுப்பதில் அரசாங்கத்திற்கு உதவி செய்தல், காலநிலை மாற்றத்தால் பாதிப்புக்குள்ளாகும் சமூகங்களை இணங்கண்டு அவர்களுக்கான உதவிகளை வழங்குதல், அது மாத்திரமின்றி சமூக வலைத்தளங்களில் காலநிலை மாற்றங்கள் தொடர்பான விடயங்களை பரப்புவதன் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வூட்டல் போன்ற பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். அந்த வகையில் இலங்கை எனும் அழகிய
தீவு நாட்டில் இந்த காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கு அல்லது அதனால ஏற்படும் விளைவுகளில் இருந்து மீள் எழுவதற்கும் இலங்கை நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொரு குடி மக்களும் எம் மால் இயன்ற முயற்சிகளை செய்து இந்தக் கொடிய பிரச்சனையிலிருந்து விடுபட்டு எமது எதிர்கால சந்ததியினருக்கு உகந்த சூழலை உருவாக்குவது நம் அனைவரதும் தலையாய கடமையாகும்.
